பெருமாளை ஸேவிக்க தேவர்கள் நந்தக முனிவரோடு கூடி இந்த ஸ்தலத்திற்கு வந்ததால் 'கூடலூர்' என்ற பெயர் உண்டாயிற்று. வையத்தைக் (பூமி) காப்பதற்காக மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைப் பிளந்து இங்கு உட்புகுந்ததாகக் கூறுவர். அதனால் வையங்காத்த பெருமாள் என்ற பெயர் பெற்றார். இந்த ஸ்தலத்தில் உள்ளே புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே வந்ததாக ஐதீகம்.
மூலவர் ஜெகத்ரட்சக பெருமாள், வையங்காத்த பெருமாள் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் 'பத்மாஸனி' என்றும் 'புஷ்பவல்லி' என்றும் வணங்கப்படுகின்றார். நந்தக முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோயில் மூழ்கி மண்மேடாகி விட்டது. ராணி மங்கம்மாள் கோயிலை மீண்டும் புதுப்பித்ததாகக் கூறுகின்றனர். இக்கோயிலின் பின்புறம் உள்ள விருட்சத்தில் பெரிய அளவில் சங்கு வடிவம் உள்ளது அரிய காட்சி.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|